×

நிலுவைத்தொகை விவகாரம் விஸ்வரூபம் எம்சிடிகளுக்கான ரூ.13,000 கோடியை உடனே விடுவிக்கக்கோரி நகர் முழுவதும் போஸ்டர்: டெல்லி அரசுக்கு எதிராக பாஜ அதிரடி

புதுடெல்லி: மாநகராட்சிகளுக்கு தர வேண்டிய ரூ.13,000 கோடி நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தும் போஸ்டர் தட்டிகளை மேம்பால கம்பங்களில் பொருத்தி ஆம் ஆத்மி அரசுடன் அடுத்த கட்ட யுத்தத்தை நூதன முறையில் பாஜ தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அசைக்க முடியாத அளவுக்கு மாநகராட்சிகளில் 14 ஆண்டாக பாஜ வலுவாக காலூன்றி உள்ளது. அதே வேளையில் நடந்து முடிந்த சட்டப்பேரவையின் 2 தேர்தல்களிலும் இமாலய சாதனை படைத்த வகையில் ஆம் ஆத்மி கட்சியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாநிலத்தில் சாதிக்க வேண்டும் என பாஜவும், மாநகராட்சியை வளைத்தே தீருவது என ஆம் ஆத்மியும் கங்கணம் கட்டிக்கொண்டு காய் நகர்த்தி வருவதால் அரசியல் சதுரங்க வேட்டையில் கடந்த ஓராண்டாக இரு கட்சிகளின் மோதலை பிற கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.வடக்கு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சிவிக் சென்டரில் நிர்வாக அலுவலகம் அமைத்துள்ள தெற்கு மாநகராட்சி, அந்த இடத்திற்கு வாடகையாக ஆண்டுக்கணக்கில் நிலுவை வைத்துள்ள ரூ.2,400 கோடி பற்றி, பட்ஜெட்டில் தகவல் இடம் பெறவில்லை என்றும், அந்த பணம் பாஜவினரால் சுருட்டப்பட்டதாகவும், இது போல மாநகராட்சிகளில் ஊழல் கரைபுரண்டு ஓடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஓயாமல் மக்களிடம் தூண்டப்பட்டு வருகிறது. அதே சமயம், மத்திய அரசால் மாநிலம் மூலமாக மாநகராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியில் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு ரூ.13,000 கோடி வழங்கப்படவில்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கெஜ்ரிவால் அரசு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பதால், நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது, டாக்டர்கள், ஆசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்ய முடியாமல் தள்ளாடுகிறோம் என 3 மாநகராட்சி மேயர்களும் டெல்லி அரசை வசைபாடுகின்றனர்.ஆம் ஆத்மி அரசை கண்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு வெளியே நவம்பரில் 11 நாள் போராட்டம் நடத்திய பாஜவைச் சேர்ந்த மேயர்களும், கவுன்சிலர்களும், அவர்களுக்கு ஆதரவாக தொண்டர்கள், அடுத்த கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதமும் அறிவித்தனர். குடியிருப்பு பகுதியில் போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தடை இருப்பதை உயர் நீதிமன்றம் எடுத்துரைத்த பின்னர், போராட்டம் வாபசானது. அதையடுத்து ஆம் அத்மி அரசுக்கு எதிராக வீடு, வீடாக கையெழுத்து வேட்டை நடத்தும் போராட்டத்தை பாஜ கையிலெடுத்தது.இந்நிலையில், மாநகராட்சிகளுக்கு ரூ.13,000 கோடி நிதியை உடனே தர வேண்டும் என தலைநகரின் அனைத்து மேம்பாலங்கள் மற்றும் நடைபாதை பாலங்களின் கம்பங்களில் போஸ்டர்கள் நேற்று முன்தினம் திடீரென முளைத்துள்ளது. அரசுக்கு எதிராக போஸ்டர் போர் தொடங்கியுள்ளோம் எனக் கூறியுள்ள மாநில பாஜ துணை தலைவர் விரேந்தர் சச்தேவா, மாநகராட்சிகள் கெஜ்ரிவால் அரசால் எப்படி வஞ்சிக்கப்பட்டன என இந்த போஸ்டர்களை பார்த்து மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்று ஆவேசம் தெரிவித்து உள்ளார்.பாஜ ஊடகப்பிரிவு தலைவர் நவீன் குமார் கூறுகையில், ‘‘ராட்சத பேனர்களும், போஸ்டர்களும் மாநில அரசின் நிதி ஓரவஞ்சனையை மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கும். மாநகராட்சிகளுக்கு ரூ.938 கோடி விடுவிக்கிறோம் என துணை முதல்வர் சிசோடியா கூட சமீபத்தில் அறிவித்தார். அறிவிப்பு அளவிலேயே அந்த நடவடிக்கை உள்ளது. நிதி ஒதுக்காததால் சம்பளம் கிடைக்காமல் டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் அல்லாடுகின்றனர்’’, என பொங்கினார். நிதி ஒதுக்காததால் சம்பளம் கிடைக்காமல் டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு பணியாளர்கள் அல்லாடுகின்றனர்….

The post நிலுவைத்தொகை விவகாரம் விஸ்வரூபம் எம்சிடிகளுக்கான ரூ.13,000 கோடியை உடனே விடுவிக்கக்கோரி நகர் முழுவதும் போஸ்டர்: டெல்லி அரசுக்கு எதிராக பாஜ அதிரடி appeared first on Dinakaran.

Tags : Vishwaroopam ,MCTs ,BJP ,Delhi Govt. New ,Delhi ,
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...